Tuesday, August 4, 2009

காயமே இது பொய்யடா! காற்றடைத்த பைய்யடா!

காயமே இது பொய்யடா! காற்றடைத்த பைய்யடா!

இந்தத் தத்துவ வரிகள உணர்த்தும் பொருள் மனித வாழ்வு நிலையில்லாதது.
காற்றடைத்த பை? அதற்கான தேடலுக்குக் கிடைத்த பதில்தான் இந்தக் கட்டுரை.

மனித உடம்பின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாட்டிற்கும்
உறுதுணையாய் இருப்பது:-

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்,
நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் ஆகிய தச
வாயுக்கள்.

பிராண வாயுவானது இருதயத்திலிருந்து மூக்கு வழியாக மேல் நோக்கி
சஞ்சரித்து, பசி தாகத்தை உண்டாக்கி உணும் உணவினை செரிக்கச் செய்து,
நமக்கு தேவையான சக்தியை வழங்கும்
பிராண வாயுக்கு தூய தமிழில் உயிர்க்காற்று என்று பெயர்.

மலக் காற்று என்று அழைக்கப்படும் அபான வாயுவானது மனித உடலில் இருந்து
மல மூத்திரங்களை வெளியே தள்ளும் பணியினை செய்து வருகிறது.

வியானன்: உடலின் அனைத்துப் பகுதியிலும் சஞ்சரிக்கும் இந்த வாயுவானது,
உண்ட உணவைத் திப்பி வேறாகவும், சாறு வேறாகவும் செய்து கொண்டிருக்கும்.
இது தொழில் காற்று என்று அழைக்கப்படும்.

உதானன்: ஒலிக்காற்று என்றழைக்கப்படும் இந்த வாயு, செரிமானத்திற்கு உதவி
புரிய, வயிற்றில் உள்ள வெப்ப சக்தியை எழுப்புவதுடன், உணவின் சாரத்தை
உடலின் பாகங்களுக்கு அனுப்பும். மேலும் இது ஓசையோடு கலந்து குரல் ஒலியை
எழுப்பும்.

சமானன்: நிரவுக்காற்று என்றழைக்கப்படும் இந்த வாயு, உதான வாயு அனுப்பும்
உணவின் சாரத்தை உடலில் உள்ள நாடி நரம்புகளுக்கு சமமாகப் பங்கிட்டு உடலை
வளர்க்கும்.

விழிக்காற்று என்றழைக்கப்படும் நாகன் கழுத்தில் இருந்து வாந்தியை
உண்டாக்கும். கண்களினால் பார்க்கச் செய்யும். முக்கல், சோம்பல்
முதலானவற்றை உண்டாக்கும்.

கூர்மன்-இமைக்காற்று: இது கண்களிலிருந்து திறக்கவும், மூடவும் செய்யும்.
மகிழ்ச்சி(புளகம்), சிரிப்பு, முக லட்சணம் முதலியவற்றை உண்டாக்கும்.

தும்மற் காற்றான கிருகரன் மூக்கிலிருந்து, குருகுருத்து தும்மலை
உண்டாக்கும்.

தேவதத்தன்-கொட்டாவிக்காற்று . இது கொட்டாவியையும், விக்கலையும்
உண்டாக்கும்.

பத்தாவதாக இருக்கும் தனஞ்சயன் என்னும் வீங்கல் காற்று மனித வாழ்வில்
இரண்டு முக்கிய பணிகளைப் புரிகிறது.கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே
தள்ளும் இதே காற்று மனிதன் இறந்த பிறகுஅவன் உடலை விட்டு வெளியேறாமல்,
மனித உடலை வீங்கச் செய்தும், நாற்றமெடுக்கும்படியும் செய்தும் அவன்
மேனியைக் குலைக்கிறது.

காற்றடைத்த பையில்தான் எவ்வளவு வேலைகள் நடக்கின்றன? ஆச்சரியமாக இருக்கிறது !

இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

No comments: