Wednesday, July 2, 2008

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!


சங்கராபரணம் ஆதிதாளம்

கண்ணிகள்


1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில்
¹
மாண்டோய், நமஸ்காரம்!

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

ம. வேதமாணிக்கம்


சொல் விளக்கம்

- ஜெகத் திரட்சகனே = ஜெகத்தின் இரட்சகனே

- தருவினில் = மரத்தில்

- சற்குருவே = சமமான குருவே

- அரியசித்தே = அறிவுக்கெட்டா


விளக்கவுரை

  1. அனைத்து/எல்லா உலகத்திற்கும் தேவனே வணக்கம் அனைத்து/எல்லா உலகத்தையும் படைத்தவருக்கு வணக்கம். நிலம், கடல், உயிரினங்கள், வானம், மற்றும் சகலத்தையும் உண்டாக்கின தயாள குணமுள்ள அப்பாவுக்கு வணக்கம்.

  1. மனித உருவம் எடுத்தவரே வணக்கம்

உலகத்தின் இரட்சகரே வணக்கம்

உலகத்தில் மனிதர் வாழ்வு பெற

சிலுவை மரத்தில் மரித்தவரே வணக்கம்

  1. பரிசுத்த ஆவியானவரே வணக்கம்

பரலோகத்தில் தேவனுக்கு சமமானவரே வணக்கம்

ஆவியாய் எங்கள் உள்ளத்தில் வாசம் செய்யும்

என்றும் அறிவுக்கெட்டாதவரே வணக்கம்

  1. மூன்றுத் தொழிலையையும் செய்பவரே வணக்கம்

மூவரும் ஒன்றாய் இருப்பவர்களே வணக்கம்

கர்த்தாக்கெல்லாம் கர்த்தரே, கருணைக் கடலே வணக்கம்

என்றுமுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியே, வணக்கம்


இப்பாடல் ஆராதனையின் துவக்கத்தில் அல்லது துதி பாடலாகவோ பாடலாம். திரித்துவ தெய்வமாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போற்றி துதிப்பதே இப்பாடல். பாடலிலுள்ள கருத்துகளை ஒருவர் அறிந்து விசுவசத்தோடு பாடுவாரானால் தேவவாசிர்வாதத்தைப் பெறுவது நிச்சயம்.